தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரை இன்று காலை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் ஐந்து மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் மார்க்கண்டேயனை சந்திக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஏராளமான திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை கடந்து உள்ளே செல்ல முயன்ற அனிதாராதாகிருஷ்ண, கீதா ஜீவன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
