சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,500 ஏக்கர் நிலம் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்குச் சொந்தமான தனியார் நிலமாகும். மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது, குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராம மக்கள் நீண்ட காலமாக இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பரந்தூருக்குச் சென்ற தற்போதைய முதலமைச்சர் விஜய், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல; மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் கிசான் மொஹோல், “பரந்தூருக்கு மாற்றாக வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்குமாறு தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (TIDCO) சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், 2025 ஏப்ரல் 7-ஆம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியதாகவும் கூறினார்.

தேர்தலுக்கு முன்னர் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுத்த நிலையில், தற்போது அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகும், மாற்று இடம் தொடர்பாக மத்திய அரசிடம் எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பது மத்திய அரசின் பதிலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version