அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் செயல்பட முடியாது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு வெளியேறியுள்ளார்.

விசிகவைச் சேர்ந்தவரும் செய்யூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது.

ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர்.

என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்.

கடந்த 2007-ஆம் ஆண்டு எழுச்சித் தமிழருக்கு அறிமுகமானதில் இருந்து, எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது.

2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானபோது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவி பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தேன்.

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.

நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன்.

அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் ஊட்டிய கொள்கை உணர்வோடுதான் இதுநாள் வரை எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியை முன்னெடுத்து வந்தேன்.

அந்தக் கொள்கை உறுதியும், சித்தாந்தத் தெளிவுமே எங்களைப் போன்ற இயக்கத் தோழர்களுக்கு உந்துசக்தியாக இருந்து வந்தன.

ஆனால், அந்த அடிப்படை அரசியல் அறம் தடம் மாறும் போது என்னால் மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு ஒரு யதார்த்தத்தை இங்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

சமீப காலங்களாகத் தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன.

ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது.

நேற்று வரை ஒரு நடிகரை ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

“விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்” என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கட்சியிலிருந்து விலகினாலும், அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன்.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம் நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறி பாய்தல் தீரம்.

இவ்வாறு பனையூர் பாபு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version