மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த போர் மற்றும் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நீண்ட நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டிஜிட்டல் முறையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சற்று முன்பு பேசிய ட்ரம்ப், “இது எளிதானதல்ல” என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார். இது மத்திய கிழக்கில் அமைதிக்கும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும் ஒரு முக்கியமான படி என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள ஈரான், அதே சமயம் இது அமெரிக்காவின் தோல்வி என்று விமர்சித்துள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விக்கு ஒரு சான்று. மக்கள் இதைப் பார்த்து தீர்ப்பளிக்கட்டும். ஹார்முஸ் நீரிணை மீது ஈரான் இறையாண்மை கொண்டுள்ளது; எனவே அங்கு போக்குவரத்திற்கு நாங்கள் கட்டணம் வசூலிப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுகிறது. இதற்காக அமெரிக்கா தனது கடற்படை கட்டுப்பாடுகளை நீக்குகிறது. ஹார்முஸ் நீரிணையின் எதிர்கால மேலாண்மை குறித்து ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் ஆலோசனை நடத்த உள்ளன.
ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்கா 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார தொகுப்பை அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்று மீண்டும் உறுதியளித்துள்ளது. அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) மேற்பார்வையில், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட அணுசக்தி பொருட்களை அப்புறப்படுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று ஒப்பந்தம், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்து, எரிசக்தி விலையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
