வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வரும் ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளில், 2025-26 நிதியாண்டுக்கான வட்டித் தொகை வரவு வைக்கத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கு 8.25% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டித் தொகையை நாடு முழுவதும் சுமார் 34 கோடி பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்கும் பணியை இபிஎஃப்ஓ தொடங்கியுள்ளது. சுமார் 1.44 லட்சம் கோடி ரூபாய் வட்டியாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
உங்கள் EPF வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
2025-26 நிதியாண்டிற்கான வருடாந்திர வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுப்பினர்கள் சரிபார்க்க பல வழிகள் உள்ளன.
EPFO உறுப்பினர் போர்டல்: EPFO உறுப்பினர் e-Sewa போர்டல் மற்றும் EPFO உறுப்பினர் பாஸ்புக் போர்டலில் உள்ள ‘Passbook Lite’ உறுப்பினர்கள் தங்கள் 12 இலக்க யுனிவர்சல் கணக்கு எண் (UAN), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா (captcha) ஆகியவற்றைப் பயன்படுத்தி EPFO உறுப்பினர் பாஸ்புக் போர்ட்டலில் உள்நுழையலாம்.
UMANG செயலி: உங்கள் மொபைலில் ‘UMANG’ செயலியைத் தரவிறக்கம் செய்து, அதில் உங்கள் யுஏஎன் எண்ணை இணைப்பதன் மூலம் பிஎஃப் இருப்பு, சந்தா விவரங்கள் மற்றும் இதர சேவைகளைத் தடையின்றிப் பெறலாம்.
SMS சேவை: உங்கள் யுஏஎன்-இன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு ‘EPFOHO UAN’ என்று டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் உங்கள் பிஎஃப் இருப்பை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
வட்டி வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டால் என்னவாகும்? வட்டி வரவு வைக்கப்படுவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. இபிஎஃப் திட்டத்தின் பிரிவு 60-ன் படி, வட்டியானது மாதந்தோறும் கணக்கில்தான் கணக்கிடப்படுகிறது. எனவே, கணக்கில் வரவு வைக்கும் தேதி எப்போது இருந்தாலும், முழு வட்டியும் பயனாளிகளுக்குக் கிடைக்கும் என்றும், எந்த இழப்பும் ஏற்படாது என்றும் இபிஎஃப்ஓ தெளிவுபடுத்தியுள்ளது.
