டொமினிகன் குடியரசு நாட்டில் நிகழ்ந்த பயங்கரமான தனியார் விமான விபத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ‘கல்ப்ஸ்ட்ரீம் ஜி200’ (Gulfstream G200) ரகத்தைச் சேர்ந்த இந்தத் தனியார் விமானம், டெக்சாஸ் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இதையடுத்து, விமானத்தை டொமினிகன் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்திற்குத் (La Romana International Airport) திருப்பி, அவசரமாகத் தரையிறக்க முயன்றனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தின் அருகே உள்ள புல்வெளியில் பயங்கரமாக மோதி சறுக்கிக் கொண்டே சென்று நொறுங்கியது. அடுத்த சில விநாடிகளில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி, கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒரு பெரிய நெருப்புப் பந்து போல பயங்கரமாக வெடித்துச் சிதறியது. வானுயரத்துக்குக் கரும்புகை சூழ்ந்ததை அடுத்து, விமான நிலையத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தின.
இந்தக் கோர விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. இருப்பினும், அதில் பயணித்த அமெரிக்கர்களான தலைமை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
https://x.com/volcaholic1/status/2063748053098492035?
பிரபல அமெரிக்கப் பேஸ்பால் ஜாம்பவான் யாடியர் மோலினா மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக இந்த விமானம் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
