புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடும் என பெ.சண்முகம் கட்டுரை எழுதியிருந்தார்.
தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ(எம்)) ஒரு அதிர்ச்சி போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “பாஜக + திமுக + அதிமுக = கொள்கை புடலங்காய்” என்ற தலைப்பில் வெளியான இந்த போஸ்டர், மூன்று முக்கிய கட்சிகளின் இணைப்பை கடுமையாக சாடியுள்ளது.
போஸ்டரில் ஒரு புடலங்காய் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிறப் பகுதியில் பாஜகவின் தாமரை சின்னம், கருப்பு நிறத்தில் திமுகவின் உதய சூரியன் மற்றும் பச்சை நிறப் பகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இடம்பெற்றுள்ளன. இந்தப் படிமம் மூலம், மக்களின் நலனுக்கு எதிராக இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து “கொள்ளைக்கூட்டணி” உருவாக்குவதாக சிபிஐ(எம்) குற்றம்சாட்டியுள்ளது.
போஸ்டரின் அடியில் சிவப்பு பின்னணியில் கட்சியின் சின்னமான சுத்தி மற்றும் அரிவாளுடன் “சிபிஐ(எம்)க்கு எப்போதும் இல்லை” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சிபிஐ(எம்) வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், “தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்த மூன்று கட்சிகளும் தங்கள் அரசியல் நலனுக்காக ஒன்று சேர்ந்து செயல்படுவதை மக்கள் உணர வேண்டும். இது மக்களுக்கு எதிரான கொள்ளைக்கூட்டணி. மக்கள் நலனுக்கு எதிரான எந்த இணைப்புக்கும் எதிராக சிபிஐ(எம்) தொடர்ந்து போராடும்” என்று தெரிவித்தனர்.
இந்த போஸ்டர் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எக்ஸ் தளத்தில் “திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு” என்று பதிவிட்டிருந்தது. எழுத்தாளர் பெ.சண்முகம் எழுதிய கட்டுரைக்கு முரசொலி நாளிதழ் “பெ.சண்முகத்தின் உண்மை முகம்” என்ற தலைப்பில் பதிலடி கொடுத்த நிலையில், சிபிஐ(எம்) தரப்பில் இந்தப் போஸ்டர் மூலம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியலில் கூட்டணி அரசியலின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
