பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று (ஜூன் 8) காலை ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் போது பள்ளி மாணவர்கள் அலறியடித்தபடி ஓடும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸில் இன்றுதான் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. தாவோ ஆக்ஸிடென்டல் (Davao Occidental) பகுதியில் உள்ள மகாயஹாய் ஆரம்பப் பள்ளியில் காலையில் மாணவர்கள் மைதானத்தில் ஒன்று கூடி, கொடியேற்றத்துடன் கூடிய பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் பூமி குலுங்கத் தொடங்கியது. நிலநடுக்கத்தின் வீரியம் தாங்காமல், மைதானத்தில் மாணவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியின் அருகே இருந்த ராட்சத தகர நிழற்குடை கூடாரம்  அப்படியே சரிந்து விழுந்தது.

https://x.com/WeatherMonitors/status/2063806759958200467?

திடீரென பூமி குலுங்கி, கூடாரமும் சரிந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள், ஆபத்தான சூழலிலும் தங்களைப் பற்றி கவலைப்படாமல், மாணவர்களை ஓடவிடாமல் தடுத்து, அவர்களைத் தங்களோடு சேர்த்து கட்டிப்பிடித்து அரவணைத்துக் கொண்டனர். நிலநடுக்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களைத் தரையில் அமர வைத்து, அவர்களுக்குப் பாதுகாப்பாக நின்றனர். ஆசிரியர்களின் இந்த சமயோசிதமான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அங்கு பெரும் அசம்பாவிதம் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுத்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜெனரல் சாண்டோஸ் சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்து விழுந்துள்ளன. இந்த விபத்துகளில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழல் காரணமாகப் பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version