பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எஸ். ஜானகி அம்மா மறைவால் இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது. தனது அசாதாரண குரல் வளத்தால் பல தலைமுறை ரசிகர்களை மயக்கினார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட அவரது இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி அழியாத தடம் பதித்துள்ளார். அவரது காலத்தால் அழியாத இசைப் படைப்புகள் என்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்;-
“பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தெய்வீகமான தனது குரலால் பல மொழிகளில் எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களுக்கு உயிரூட்டியவர் ஜானகி அம்மா. இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய கலாச்சாரச் சின்னங்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், இசை உலகில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”
நடிகர் விஷாலின் இரங்கல் செய்தி;-
நமது திரையுலகின் மற்றொரு மாபெரும் ஆளுமை இனி நம்மிடையே இல்லை. இசைத்துறைக்கு இது ஒரு பேரிழப்பு.
சில குரல்கள் காலத்தைக் கடந்து வாழ்பவை, அவை ஒருபோதும் நம்மை விட்டு மறைவதில்லை. ஜானகி அம்மாவின் பாடல்கள் வெறும் மெல்லிசைகள் மட்டுமல்ல, அவை நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மோடு பயணித்த நினைவுகள்.
இன்று, நாம் அந்த குரலுக்கு விடை கொடுக்கிறோம், ஆனால் அவர் கோடிக்கணக்கான நமக்கு பரிசளித்த உணர்வுகளுக்கு என்றும் முடிவில்லை.
ஆழ்ந்த இரங்கல்கள் ஜானகி அம்மா. உங்கள் இசை தலைமுறைகளைக் கடந்து என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு;-
சுமார் 60 ஆண்டு காலம் இந்தியத் திரையிசை உலகின் இணையற்ற இசைச் சக்கரவர்த்தினியாக பல கோடி இதயங்களை தனது வசீகரக் குரலால் மெய்யுருக வைத்த கலைமாமணி எஸ். ஜானகி அம்மா அவர்கள் மீளாத் துயில் கொண்டது, இந்தியத் திரையுலகிற்கும், இசை பிரபஞ்சத்திற்கும், எண்ணற்ற கோடி இசை ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துளு, கொங்கணி, உருது, பஞ்சாபி, பெங்காலி, ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, மொழிகளையும், மாநில எல்லைகளையும், தலைமுறைகளையும் கடந்தும் இசை ரசிகர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் அழியாப் புகழைப் பெற்றவர்.
நான்கு தேசிய திரைப்பட விருதுகள், சிறந்த பின்னணிப் பாடகிக்கான பல மாநில அரசுகளின் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், உள்ளிட்ட எண்ணற்ற உயரிய கௌரவங்களைப் பெற்று, இசை வரலாற்றில் காலம் உள்ளவரை தனக்கென அழியாத முத்திரையைப் பதித்தவர்.
அவரது குரல் வெறும் இசையாக மட்டுமல்ல, மகிழ்ச்சி, காதல், தாய்மை, பக்தி, ஏக்கம், வலி, நம்பிக்கை என மனித உணர்வுகளின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும் உயிரூட்டிய ஓர் இணையற்ற அற்புத சக்தியாகும்.
இசைச் சக்கரவர்த்தினி எஸ். ஜானகி அவர்கள் மண்ணுலக வாழ்வைத் துறந்தாலும், அவரது ஆயிரக்கணக்கான பாடல்கள் காலம் உள்ள வரை மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.
