இந்தியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய அரசு முறை சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கான இந்தப் பயணம், இந்திய ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக அமைந்துள்ளது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி முர்மு, ஜூலை 20-ம் தேதி (நாளை) மால்டோவாவுக்குச் செல்லவுள்ளார். அங்கு அதிபர் மாயா சாண்டுவை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மால்டோவா நாடாளுமன்றத் தலைவர் இகோர் குரோசு உடனான சந்திப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்தியா-மால்டோவா நட்புறவுக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்கிறார். வர்த்தக நிகழ்ச்சியில் உரையாற்றி, இரு நாட்டு தொழில்துறையினருக்கு இடையே புதிய இணைப்புகளை ஏற்படுத்துவார்.
இதைத் தொடர்ந்து ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வடக்கு மாசிடோனியாவுக்குச் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டு அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவின் அழைப்பின் பேரில் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வித் துறை ஒப்பந்தங்கள் குறித்து முக்கியப் பேச்சுகளை நடத்துவார்.
பின்னர் ஜூலை 23 முதல் 25 வரை ருமேனியாவுக்குச் செல்லும் ஜனாதிபதி முர்மு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் பயணம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு ருமேனிய தலைவர்களுடன் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
உக்ரைன் போர், உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள், சர்வதேச வர்த்தக மாற்றங்கள் ஆகியவை நிலவும் சூழலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் முயற்சியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. இந்த மூன்று நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதால், இந்தியாவின் ஐரோப்பிய உத்தியில் இது முக்கிய அடியெடுப்பாக அமையும்.
வர்த்தகம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மாற்று மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் உலகளாவிய தூதரக உறவுகள் மேலும் விரிவடையும் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
