நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வெளியிட்டுள்ள திடீர் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளது.
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து அவர் வெளியிட்ட இந்த அதிரடித் தகவல் நாடு முழுவதும் உள்ள மாணவர்களையும் பெற்றோர்களையும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.
நீட் விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், தவறு செய்தவர்கள் மீது மிகக்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அந்த வீடியோவில் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் எங்கு இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும், உரிய விசாரணை நடத்தி கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 134 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளதுடன், எக்ஸ் தளத்தில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு வனப்பகுதியில் விலங்குகளுடன் அவர் நேரம் செலவிட்ட வீடியோவே அதிகபட்சமாக 100 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்த நிலையில், தற்போது நீட் விவகாரத்தில் அவர் வெளியிட்ட இந்த நள்ளிரவு வீடியோ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
