59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர்கள் மூலம் கட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த நிலையில், தேசிய தலைமை காங்கிரஸை வலுப்படுத்த பல்வேறு உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களையும் இதே கூட்டணியில் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி மூலம் கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்தவும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கட்சியின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டங்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று, கட்சி பணிகள் வேகம் பெற்றுள்ளன. உறுப்பினர் சேர்க்கை, தொகுதி மட்டப் பணிகள், இளைஞர் பிரிவு வலுப்படுத்தல் ஆகியவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாவட்டத் தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி முகாம் சென்னை ஈ.சி.ஆரில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்று, கட்சியின் தேர்தல் உத்திகள், அரசியல் நிலவரங்கள், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயிற்சி மூலம் மாவட்ட அளவில் தலைவர்களின் திறனை மேம்படுத்தி, அடுத்தக் கட்ட தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கம் உள்ளது. மேலும், தவெகவுடன் இணைந்து ஒரே மேடையில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதலமைச்சர் விஜயிடம் நேரம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை இத்தகைய முயற்சிகள் மூலம் தமிழக அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version