‘விஜய்க்கும் ராகுலுக்கும் இடையே தற்போது கூட்டணி ரீதியாக நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என கசிந்துள்ள தகவல் தான் அறிவாலயத்தினரையும் சத்தியமூர்த்திபவனில் ஒரு பிரிவினரையும் அப்செட் ஆக்கியிருக்கிறது. அந்த அத்தகவலின் முழு பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

சமீப நாட்களாகவே திமுக மீதான அதிருப்தியை கே.எஸ்.அழகிரி, கிரீஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே கட்சிக்கூட்டத்திலும் பொது வெளியிலும் பேசி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் காரணம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் படிப்படியாக தேய்ந்து வருவதே. வெற்றிக்காக ‘கதரை’ பயன்படுத்திக்கொள்ளும் ‘கருப்பு சிவப்பு’, அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் ‘கம்பி நீட்டி விடுவது’ வழக்கமாகி விட்டது. “திமுக மட்டும் கடந்த காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு பெறுவார்களாம்; ஆனால் மாநிலத்தில் காங்கிரசுக்கு பங்கு தரமாட்டார்களாம்!” என பாயிண்ட்டாக பேசும் கதர்ப்புள்ளிகள், இந்த முறை இருக்கும் அரசியல் சூழலை பயன்படுத்தி அதிகாரத்தில் பங்கு பெற்றுவிட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அறிவாலயத்திலோ அதற்கு பிடிகொடுக்கும் எந்த நகர்வுகளும் தென்படுவதாக இல்லை.

அதையெல்லாம் அறிந்த காங்கிரஸாருக்கு அடுத்த தேர்வாக ஆகிப்போனது தமிழக வெற்றிக்கழகம். காரணம் தனது முதல் மேடையிலேயே, “தன்னை நம்பி வருவோருக்கு ஆட்சியில் பங்கு” என முழக்கமிட்டார் விஜய். சொல்லப்போனால் அந்த முழக்கம் தான் திமுகவை எதிர்க்கும் அளவிற்கு காங்கிரசுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம், ராகுல் – விஜய் இடையேயான நட்பு சில பல ஆண்டுகள் முந்தையது. குறிப்பாக, விஜய்யின் பிறந்தநாள் மற்றும் மதுரை மாநாட்டின் போது, விஜய்யுடன் போனில் பேசியிருக்கிறார் ராகுல். அந்த பேச்சு கரூர் சம்பவத்திற்கு பிறகும் நீடித்துள்ளது. மேலுள்ள ‘தலை’களின் உரையாடலுக்கு பின், தவெக முக்கியப்புள்ளிகளுடன் தொடர்பிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள் சீனியர் ‘கதர்’கள்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், ராகுலின் நம்பிக்கைக்குரிய பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழக வெற்றிக்கழகத்தின் மேல்மட்ட நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பனையூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை மூலமாக இதை அறிந்துள்ள திமுக தலைமை, காங்கிரஸ் இல்லாவிட்டால் அடுத்த திட்டம் என்ன? என்று பிளான் ‘பி’ லெவலுக்கு யோசித்துள்ளதாம். அதாவது, காங்கிரசுக்கு கொடுத்த 25 சீட்டுக்களை தற்போது கூடுதலாக இடங்கள் கேட்கும் இதர கூட்டணி கட்சிகளுக்கும், புதிதாக கூட்டணிக்கு வருவதாக பார்க்கப்படும் ராமதாஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கும் கொடுத்து சரிகட்டலாம் என்பது தான். ‘சீட்’ கூட தருவேன் ஆனா, அதிகாரம் தர மாட்டேன்’ என்ற முடிவு தான் இது.

இந்தப்பக்கம் காங்கிரஸோ, ‘திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும்பட்சத்தில் தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைப்பது?’ என்பதை பற்றி ஆய்வு செய்ய கிரீஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது என்ற தகவல்கள் வருகின்றன. கட்சியின் இத்தகைய முடிவால் ‘தவெக’வுடன் கூட்டணி அமையுமோ? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே எகிறியுள்ளது.

“என்ன ஆனாலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இப்போதைக்கு வெளியேற மாட்டார்கள்; திமுக தலைமையும் அவ்வாறு நடக்க விடாது” என பல மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் சொல்லி வரும் இதே சூழலில் தான், “நாம் பலமாக இருக்கும் தொகுதிகளை பறிக்க முயலும் திமுகவை சகித்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக அவர்கள் செய்யும் ஊழல்களுக்கு முட்டு கொடுத்து எத்தனை நாள் தான் உழைப்பது? அதிகாரத்தில் பங்கும் தர மாட்டார்கள்? எதுவும் இல்லாமல் எதற்கு இக்கூட்டணியில் இருக்க வேண்டும்?” என்ற கூக்குரல்களும் காங்கிரசுக்குள் வெடித்து வருகிறது. மறுபுறம் திமுக பக்கமிருந்து பார்த்தால், தமிழ்நாட்டில் தற்போதைய காங்கிரஸ் திமுகவுக்கு சுமையாக இருக்கிறது என்றே பார்க்கப்படுகிறது. தேசிய அரசியலில் காங்கிரசின் உதவி திமுகவுக்கும், திமுகவின் உதவி காங்கிரசுக்கும் தேவை என்றாலும் மாநில அளவில், மேலே சொன்னது போல் திமுகவுக்கு காங்கிரஸ் சுமையாகவும், காங்கிரசுக்கு திமுக முதலாளி போலவும் இருக்கும் எண்ணம் இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணத்தின் நீட்சியாகவே காங்கிரஸ் – தவெக உறவு பற்றிய பேச்சு ஓடுகிறது.

கருத்துக்களும் யூகங்களும் இப்படியாக இருப்பினும் நிகழ்வது என்னவென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. காங்கிரஸின் நகர்வுகள் அவர்களின் வளர்ச்சிக்கான நிரந்தர மாற்றத்திற்காகவா? அல்லது தற்காலிக அதிகார முக்கியத்துவத்திற்காகவா? என்ற கேள்விகளுக்கான பதில் காங்கிரஸிடம் தான் உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version