இந்திய கடற்படையின் மேம்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பலைபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தித் துறையின் புதிய சக்தி மையமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசம் வான், கடல், நிலம் மற்றும் ஆளில்லா (Unmanned) பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் கூறினார்.

புட்டபர்த்தியில் மேம்பட்ட நடுத்தர போர் விமானமான AMCA-வுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பறக்கும் சோதனை மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், அனகாப்பள்ளி மாவட்டத்தில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தின் புதிய கடற்படை ஆயுத உற்பத்தி மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு தன்னாட்சி நீர்மூழ்கி வாகனங்கள், டார்பிடோக்கள் மற்றும் நீருக்கடிப் பாதுகாப்பு அமைப்புகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுத அமைப்புகள் இனி விசாகப்பட்டினம் அருகிலேயே தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வானில் AMCA, கடலின் ஆழத்தில் BDL கடற்படை அமைப்புகள், கர்னூலில் ட்ரோன்கள், இன்று கடல்மேல் ஐஎன்எஸ் மகேந்திரகிரி என ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அனைத்து தளங்களிலும் வலுப்படுத்தி வருகிறது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனம் உள்நாட்டிலேயே கட்டியுள்ள ஐஎன்எஸ் மகேந்திரகிரி, சுமார் 6,670 டன் எடை கொண்ட பல்நோக்கு போர்க்கப்பலாகும். இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் போர்க்கப்பலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மற்றும் டார்பிடோ ஏவுதளங்கள், அதிநவீன மின்னணு போர் (Electronic Warfare) அமைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய திறனும் உள்ளது.

மேற்கு ஆசிய மோதலுக்குப் பிறகு ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்‌ஷா’ நடவடிக்கையின் மூலம் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பாக வழிகாட்டியதை ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்.

“இந்திய கடற்படை இன்று ஒரு போர் படையாக மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வலிமையான காவலராகவும் திகழ்கிறது” என்று அவர் பாராட்டினார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்திய கடற்படையில் 6 நவீன போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் கப்பல் கட்டும் திறனுக்கும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்கிற்கும் மிகப்பெரிய சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

புதிய தொழில்நுட்பங்களும் பாரம்பரிய ராணுவ வலிமையும் ஒன்றுக்கொன்று துணைபுரிவவை என்றும், இரண்டிலும் இந்தியா முன்னேற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு திறன் மற்றும் பாதுகாப்பு வலிமையை மேலும் உயர்த்தும் முக்கிய போர்க்கப்பலாக ஐஎன்எஸ் மகேந்திரகிரி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version