கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகளின் அரங்குகளை பார்வையிட்டார்.

மா விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி, இந்த ஆண்டு 32வது முறையாக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. கண்காட்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் விளைந்த பல்வேறு ரக மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வனத்துறை, மகளிர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் 30 அரங்குகளும், தனியார் நிறுவனங்களின் 50 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

காவேரிப்பட்டினத்திலிருந்து வந்த பார்வையாளர் ஜெயந்தி, மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை, தேவதைகள் உள்ளிட்ட அலங்காரங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

கண்காட்சியையொட்டி நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் முகுந்தன், இளையராஜா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version