மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது தான் நாடாளுமன்றம்.
மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன. 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு உறுப்பினர்கள் ஆவர்.
மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ.க்கள்) வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளன. தற்போது, மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதன்படி, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது.
கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக் காலமும் முடிவடைகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோன்று, தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால்,
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அன்புமணி ராமதாஸ் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
அதனால், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரின் வாக்கு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.
இருப்பினும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களை அ.தி.மு.க.வால் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, அ.தி.மு.க.வில் 2 மாநிலங்களவை எம்.பி. பதவிகளைப் பெற போட்டா போட்டி நிலவுகிறது.
காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது. அதற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். 6 பேர் மட்டும் விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றே கூறப்படுகிறது