தமிழ்நாட்டில் நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதில் திராவிட மாடல் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். அதன் ஒரு புதிய மைல்கல்லாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளா தகவலில், “பொறுப்புமிக்க, திறன்மிக்க நிதி மேலாண்மையின் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலையை நாம் சீர்செய்து வருகிறோம். அதன் ஒரு புதுமுயற்சியாக, நமது சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன,” என்று குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை மூலம் ஏற்படும் பலன்களைப் பற்றி விளக்கிய முதலமைச்சர், “இதன் வாயிலாக, மாநகராட்சி கடனுக்கான வட்டி செலுத்துவது குறையும். அதே நேரத்தில், மழைநீர் வடிகால் அமைப்பது போன்ற மிகவும் இன்றியமையாத உட்கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி எளிதாகத் திரட்டப்படும். இதன்மூலம், சென்னை மாநகராட்சியின் ஒட்டுமொத்த நிதிநிலையும் மேலும் மேம்படும்,” என்று உறுதியளித்தார்.

மாநகர வளர்ச்சிக்கும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த நிதிப் பத்திரம் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்யும் என்றும், இது திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகவும் அமையும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version