நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட முற்றுகைப் பேரணியில் நிகழ்ந்த தடியடி சம்பவத்தில் 178 பேர் காயமடைந்துள்ளதாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாக புறப்பட்டு போராட்டத்தை நடத்தினர். தடை உத்தரவு மற்றும் பாதுகாப்பு தடைகளை மீறிப் பேரணியாகச் செல்ல முயன்றதால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு நாடாளுமன்றம் நோக்கி முன்னேற முயன்றதால், அவர்களைக் கட்டுப்படுத்தப் காவல்துறையினர் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் தடிஅடி நடத்தினர். கூட்டத்தைக் கலைக்கக் பல இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.
இந்த வன்முறை மற்றும் தடிஅடியில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் உட்பட சுமார் 178 பேர் காயமடைந்தனர். தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 70-க்கும் மேற்பட்டோரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
