கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரம்பட்டி பகுதியில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் ஒன்று, முறையான இணைப்புச் சாலை இல்லாததால் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது.
கானம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஊத்தங்கரை நகருக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்குத் தீர்வாகப் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடந்த 2022-23 நிதியாண்டில் தமிழக அரசு சார்பில் நபிராம்பட்டி – விளாநத்தம் சாலையில், பாம்பாற்றின் குறுக்கே சுமார் 9.39 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
பாலம் கட்டி முடிக்கப்பட்ட போதிலும், அதனை இணைக்கும் சுமார் 7 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை முற்றிலும் தார் பெயர்ந்து, மிக மோசமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் இந்தச் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட இப்பகுதி மக்கள், தங்களின் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக இருப்பதால் அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கிராமத்திற்குள் வர மறுப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் வரத் தயங்குவதால் மாணவ, மாணவிகளின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. பேருந்து வசதி வரும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்துப் பாலம் கட்டினாலும், இந்த 7 கிலோமீட்டர் இணைப்புச் சாலையைச் சீரமைத்தால் மட்டுமே பாலம் முழுப் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கும் கானம்பட்டி பகுதி மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டுப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
