திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டதாக மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என ஆர்.எஸ்.பாரதி கடிந்துரைத்துள்ளார்.
மே 23ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று காங்கிரச் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட மே 4ஆம் தேதி அன்று மாலையே திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி போட்டு ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும் இதற்கு பாஜக முக்கிய நிர்வாகி இரு கட்சிகளையும் பேச வைத்ததாகவும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக ஆதரவு அளிப்பதாகவும், அதனைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அப்பட்டமான பொய் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கடிந்துரைத்துள்ளார்.
காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பின்பு காங்கிரசாரை தவிர மற்ற அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்தார்கள். தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள்தான் நன்றி கெட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
