தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நினைவூட்டும் விதமாக சேலத்தில் அதே பாணியில் வறுமையில் வாடிய 50-க்கும் மேற்பட்ட பெண்களைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள அதிர்ச்சி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சிக்கும் தவெக பிரமுகர்கள்
உதவி செய்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தவெகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதைய சேலம் பாலியல் வன்கொடுமை நிகழ்விலும் தவெக நிர்வாகி ஒருவர் சிக்கி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை பெண்களுக்கு குறி
சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், வேலைவாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் கடுமையான பொருளாதாரக் கடன் சுமையில் தவிக்கும் பெண்களைத் திட்டமிட்டுத் தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார். அவர்களுக்குப் பண உதவி மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர், அவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தனிமையான இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்தோடு நிறுத்தாமல், பெண்களின் அனுமதியின்றி அவர்களுடனான ஆபாசக் காட்சிகளையும், உரையாடல்களையும் ரகசியமாகத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களைக் காட்டியே மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்களைத் தனது நண்பர்களின் பாலியல் பசிக்கும் பலியாக்க கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறாகச் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் இவரால் சீரழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மாட்டிக்கொண்ட கொடூரன்

தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சாமர்த்தியமாக மணிகண்டனின் செல்போனை ஆராய்ந்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, அதிலிருந்த சில முக்கியத் டிஜிட்டல் ஆதாரங்களைத் தனது மொபைலுக்கு மாற்றிக்கொண்டு, தைரியமாகத் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தலைமறைவாக முயன்ற மணிகண்டனை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஒரு புதிய அரசியல் கட்சியின் பொறுப்பில் இருந்துகொண்டு, ஏழைப் பெண்களின் வறுமையை ஆபாச வீடியோவாக மாற்றி மிரட்டிய இந்த விவகாரத்தில், தொடர்புடைய பின்னணி நபர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி ‘குண்டாஸ்’ சட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
