2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இடையேயான பனிப்போர் மெல்ல வெடிக்க தொடங்கியுள்ளது. சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என கூறி அதிமுகவை மீட்போம் என்ற இலக்கோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கினார் தொடங்கியது முதலே எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தும் அதிமுகவை எதிர்த்து 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் கண்டது டிடிவி தலைமையிலான அமமுக.

2021 தேர்தல் முடிவுகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கியத்துவத்தை டெல்லி பாஜகவிற்கு உணர்த்தியது இதனை அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சமாதானம் செய்து கூட்டணிக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை டிடிவி தினகரன் வைத்து தன்னை அதிமுகவில் இணைத்து விடுவார் என்று சசிகலா எதிர்பார்த்தார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் அப்பொழுது நமக்கு எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பல நிர்வாகிகள் எதிர்பார்த்தனர் ஆனால் டிடிவி தினகரனின் முடிவு சசிகலா மற்றும் அமமுகவை சேர்ந்த பல நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு படி மேலே சென்று அதிமுகவில் என்றைக்குமே சசிகலாவிற்கு இடமில்லை திரும்பத் திரும்ப அந்த கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என்று ஒரே போடாக போட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா வரும் தேர்தலில் தனித்து களம் காணப் போவதாக அறிவித்தார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் தான் நேற்றைய தினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த பலர் சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். சசிகலாவை சந்தித்த நிர்வாகிகளை டிடிவி தினகரன் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் சசிகலாவுக்கு எதிராக தங்களது போர்க்கொடியை தூக்கி உள்ளனர் குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் சசிகலா என்று பலர் தூற்றிய போது டிடிவி தினகரன் தான் கை கொடுத்தார் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பதிலுக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் டிடிவி நம்பி தானே ஆட்சியையும் கட்சியையும் சசிகலா விட்டு சென்றார் ஆனால் திரும்ப வரும் பொழுது அது எதுவுமே இல்லையே. தன்னுடைய சுயநலத்திற்காக சசிகலாவை டிடிவி தினகரன் விட்டுவிட்டார் என்று விமர்சனத்தையும் சசிகலாவின் ஆதரவாளர்கள் வைத்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இடையே இருந்த பனிப்போர் தற்போது எரிமலையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version