டெல்லி ஜந்தர் மந்தரில் ‘நீட்’ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் களமிறங்கியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்தின் புல்வெளியில் திரண்ட மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், டாக்டர் எஸ். முரளிதரன் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (SCBA) விகாஸ் சிங் ஆகியோர் தலைமையில் திரளான இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
தேசியக் கொடிகள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களை ஏந்தியபடி, அவர்கள் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை (Preamble) உரக்க வாசித்துத் தங்களின் மாபெரும் கண்டனப் போராட்டத்தைப் பதிவு செய்தனர்.
போராட்டம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “நாங்கள் இங்கு மாணவர்களுக்காகவும் நீதியின் பக்கத்திலும் நிற்க வந்துள்ளோம். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது எங்களின் சுயநலத்திற்கான போராட்டம் அல்ல; மாணவர்களின் உரிமைகளுக்கானது. மாணவர்களுக்காக நீதி கேட்க வேண்டியது வழக்கறிஞர்களாகிய எங்களின் கடமை. நீதியை வழங்குவதே உச்ச நீதிமன்றத்தின் முதன்மைப் பணி; அதனால்தான் இந்த நீதியின் ஆலயத்தில் எங்கள் கோரிக்கைகளுடன் நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் லத்திகளையும் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்-ஆன்-ரெக்கார்ட் சங்கம் (SCAORA) ஆகியவை கடுமையான கண்டனப் பதிவுகளைத் தனித்தனியாக வெளியிட்டுள்ளன.
மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைதியான வழிப் போராட்ட உரிமையை வலியுறுத்தி, சுமார் 650-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில், மாணவர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், காவல்துறையின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
