கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2026-2027ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் அனைத்தும் இன்று (ஜூன் 4) முதல் திட்டமிட்டபடி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
கடுமையான வெயில் நிலவி வந்ததன் காரணமாக கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது பெற்றோர்கள், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக இன்று (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்தும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் இனிப்புகள் மற்றும் மலர்கள் வழங்கி இன்முகத்தோடு வரவேற்றனர். புதிய வகுப்பறை, புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் தங்களது நண்பர்களை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி எனப் பள்ளி வளாகங்கள் அனைத்தும் கலைகட்டின.
இதனிடையே பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
