தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக, டெல்லியில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையும், அவர்களைக் கைது செய்திருப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறும் செயலாகும். கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியான முறையில் போராடும் உரிமையையும் பறிப்பது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி  அவர்களையும் காவலில் எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் செயலாகும் எனச் சாடியுள்ளார்.

நீட் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; அது சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் பிரச்சினையாகும். இதனை உணர்ந்து, நீட் விலக்கை வலியுறுத்தி போராடி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள். மாணவர்களின் நலனே முதன்மை என்ற நிலைப்பாட்டில், அவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கிறது எனக் கூறியுள்ள அமைச்சர் கீர்த்தனா,

மாணவர்களின் குரலை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வை வழங்குவதே ஜனநாயக அரசின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவித்து, ஜனநாயக உரிமைகளை மதித்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version