கரூர் துயர சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்.

கரூரில் இதுவரை இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடந்ததே இல்லை. எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றிகள்.

கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் விஜய் வாகனத்தை போலீசார் முன்னதாக நிறுத்த கூறினர். அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே கூட்டம் அவரை பின் தொடர்ந்தது. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கு நிலைமை மோசமடைந்துவிட்டது. இதனால் விஜய்யின் கவனத்தை ஈர்க்க யாராவது செருப்பை வீசியிருக்கக்கூடும்.

விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது. என்னை பற்றி விஜய் 16-வது நிமிடத்தில் தான் பேசினார். என் பெயரை விஜய் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர். கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது தான் எனக்கு தகவல் வந்தது. அந்த தகவலின்பேரில் தான் கட்சி அலுவலகத்தில் இருந்து 7.47 மணிக்கு அமராவதி மருத்துவமனைக்கு சென்றேன். அதிமுக மாவட்ட செயலாளர் 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார்.

போலீஸ் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால் தான் இவ்வளவு பிரச்சினை. கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆப் செய்யப்பட்டது. அப்போது கூட சாலை விளக்குகள் ஆப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆப் செய்யப்பட்டது. வீடியோவில் எல்லம் தெளிவாக உள்ளது, எங்கும் மின் விநியோகம் தடைபடவில்லை.

கரூர் துயர சம்பவத்தை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும் வகையில் விஜய் பேசுகிறார். விஜய்யின் விக்கிரவாண்டி, மதுரை என அனைத்து கூட்டங்களிலும் தொண்டர்கள் பாதிக்கப்பட்டனர். விஜய்க்கு வருவது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம். கரூர் பரப்புரையின் போது குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட தவெக தரப்பில் செய்து தரப்படவில்லை. வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்த அடுத்த நாளில் 2,000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா?

விஜய், அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்சினையே நடந்திருக்காது. கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். யார் பாதிக்கப்பட்டாலும் அரசு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version