கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் மிக கொடுமையானது. யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
கரூர் சம்பவத்தில் அரசியல் குற்றச்சாட்டு இல்லாமல், அரசியலாக யாரும் பார்க்க வேண்டாம், மக்கள் நலனில் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய கூடிய பணியாக பார்க்கிறோம். தவெகவினர் முதலில் கேட்ட இடம் லைட் ஹவுஸ் கார்னர். அங்க எவ்வளவு பேர் நிற்க முடியும் சொல்லுங்கள்? அடுத்ததாக உழவர் சந்தை எவ்வளவு சிறிய இடம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடமாக நினைத்து வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டது.
லைட் ஹவுஸ் பகுதியில் சந்திப்பு நடந்திருந்தால் அமராவதி ஆறு ஓடுகிறது, அசம்பாவிதம் இன்னும் அதிகமாகி இருக்கும். எவ்வளவு கூட்டம் வருகிறதோ அதற்கு ஏற்றார்போல தான் இடத்தை அரசியல் கட்சி தேர்வு செய்ய வேண்டும். அனுமதி கேட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதை காவல்துறையினர் தீர்மானித்து செயல்படுவார்கள். வேலுசாமிபுரத்தில் ஆயிரம், 2 ஆயிரம் செருப்புகள் தான் இருந்தது. ஒரு தண்ணீர் பாட்டிலாவது இருந்ததா? வந்த மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட வசதிகளை செய்யவில்லை. இதனை அவர்கள் செய்திருக்க வேண்டும்.
12 மணிக்கு நடக்க இருந்த கூட்டம் 7 மணியாகிவிட்டது. 4 மணிக்கு 5 ஆயிரம் பேர் இருந்தாங்க. அப்போது கூட்டம் நடந்து இருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்து இருக்காது. காவல்துறை பாதுகாப்பு அளிக்கும், அரசு கேட்க கூடிய இடங்களை கொடுக்கும். அரசு தரப்பில் இருக்கும் இடங்களை கேட்டால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும். கட்சி தலைவர் பேசக் கூடிய இடத்திற்கு மக்கள் கூட்டம் வருவதை பொறுத்து அந்த இடம் போதுமா என்பதை கட்சி தானே முடிவு எடுக்க வேண்டும். இனி வரக் கூடிய நாட்களிலாவது இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க சரி செய்ய வேண்டும். ஜெனரேட்டர் அறையில் சென்று யார் அதை நிறுத்தியது. இத்தனை ஆயிரம் பேர் இருக்கும் சூழலில் யாராவது தவறாக உள்ளே நுழைந்து அசம்பாவிதம் ஏற்படுத்திட முடியுமா? அங்கே தவெக தொண்டர்களும், கட்சி ஆளுங்களும் இருந்தனர். விஷமிகள் உள்ளே நுழைந்திருந்தால் அது கட்சி ஆட்களுக்கே தெரிந்து இருக்கும். ஜெனரேட்டர் அறையை பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆனால், அங்கிருந்தவர்கள் தடுப்புகளையும் மீறி ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து அதை துண்டித்துள்ளனர். இதுக்கு தவெக தான் பொறுப்பு.
விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்தது 19 நிமிடம் தான். விஜய் பேச ஆரம்பித்த 6வது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டு இருக்கு. 7.12 மணிக்கு நிறைய பேர் மயக்கமடைந்ததாக விஜய்க்கு சொல்லப்பட்டது. 14வது நிமிஷத்தில் அங்கு பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பில் இருந்தவர்கள் விஜய்யிடம் சொல்லியுள்ளனர். 19 நிமிடங்கள் மட்டுமே அவர் பேசியுள்ளார். தமிழ்நாடு அரசின் மீது பழியை போட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் தவறான தகவல்களை பரப்பினர்.