சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட தற்காலிக பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் திடீரென தீப்பற்றி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த ராம்பிரகாஷ் (32), ராமச்சந்திரன் (40), இன்னாசிமுத்து (44), பாண்டித்துரை (35) ஆகிய தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு உற்பத்தி கூடங்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளதாக அறிக்கையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.