ல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்களால் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. அதில், 2026-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 2.63 லட்சம் பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டதாகவும், 17 பேர் உயிரிழந்ததாகவும் வெளியான தகவல்களை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும், இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் விடக்கூடாது என்றும், அவற்றை உரிய பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவுகளை கண்காணிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

குறிப்பாக கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version