பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகள் குறித்து சமூக ஊடகங்களில் அடிக்கடி விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், மாணவர்கள் வகுப்பறையில் சினிமா பாடல்களுக்கு ஆடுவது அல்லது பாடுவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகின்றன. இத்தகைய வீடியோக்களை சுட்டிக்காட்டி, தற்போதைய அரசின் கல்வித் தரம் சரிந்துவிட்டதாகவும், மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் சிலர் அரசியல் காரணங்களுடன் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்று 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பழைய காட்சி என்பதை அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அரசுப் பள்ளி மாணவர்கள் சீருடையில் சினிமா பாடலை பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 2022-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளின் போது சில ஆசிரியர்கள் மாணவர்களை சினிமா பாடல்களுக்கு நடனமாடச் செய்த வீடியோக்கள் பகிரப்பட்டன. அப்போதே அவை சர்ச்சையை ஏற்படுத்தின. தற்போது அதே பழைய வீடியோக்களை எடுத்து, “தற்போதைய அரசில் அரசுப் பள்ளிகளின் நிலை இதுதான்” என்கிற வகையில் தவறாகப் பரப்பப்படுவதாக தகவல் சரிபார்ப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ பதிவில், “அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடுவது போன்ற வீடியோ முற்றிலும் தவறான தகவல். இது 2022-ல் வெளியான பழைய வீடியோ. தற்போது புதிய சம்பவம் போல தவறாகப் பரப்பப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் சிலர், பள்ளி நிகழ்ச்சிகளில் பொழுதுபோக்கு கூறுகளை அனுமதிப்பது ஒரு பக்கம் இருக்க, வகுப்பறை நேரத்தில் ஒழுக்கத்தைப் பேண வேண்டியது அவசியம் என்கின்றனர். மேலும் பழைய வீடியோக்களை அரசியல் லாபத்துக்காக திரிபுபடுத்துவதும் கண்டிக்கத்தக்கது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய தவறான தகவல் பரப்பல்கள் மாணவர்களின் எதிர்காலத்தையும், அரசுப் பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் என்பதால், உண்மைக்கு மாறான பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
