கிரிக்கெட் வரலாற்றில் தேனீக்கள் மொய்த்தது, சூரிய கிரகணம் நிகழ்வது போன்ற பல்வேறு விசித்திரமான காரணங்களால் ஆட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது அதைவிடவும் ஒரு அதீத சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் விட்டில்சி (Whittlesey) மற்றும் வெரிங்டன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்கு அருகில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதனால் சுமார் 90 நிமிடங்கள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதுடன், கிரிக்கெட் வீரர்களே களத்திலிருந்து ஓடிச்சென்று மக்களைப் பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விட்டில்சியில் உள்ள அலிவால் சாலைக்கு அருகிலுள்ள மைதானத்தில் மாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட தீவைப்புச் சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயை அணைக்க களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்:
விட்டில்சி அணியைச் சேர்ந்த ஆண்ட்ரூ வார்ட் மற்றும் அவரது சக வீரர்களான டேவிட் டிராட், ஆண்ட்ரூ பிலிப்ஸ், பிரையன் வார்விக் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ஒரு வீட்டை நோக்கிப் புகை சூழ்ந்துள்ளது. உடனே ஆட்டத்தை பாதியில் விட்ட வீரர்கள், அந்த வீட்டின் அருகில் ஓடிச் சென்று மக்களைப் பாதுகாக்கும் பணியில் இறங்கினர்.
இது குறித்து பேசிய ஆண்ட்ரூ வார்ட், “புகை மெல்ல வந்து திடீரென தாங்க முடியாத அளவுக்கு மாறியதுடன் தீப்பிழம்புகளும் தென்பட்டன. அந்த வீட்டில் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதும், வீட்டை எங்களால் முடிந்தவரை காப்பாற்றுவதுமே எங்களின் முதல் எண்ணமாக இருந்தது. அந்த நேரத்தில் கிரிக்கெட் எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை” என்றார்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், அந்த வீரர்கள் வீட்டின் சுற்றியுள்ள வேலிகளை அகற்றிவிட்டு, குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். சுவாரஸ்யமாக, இடைவேளைக்கு முன்பு வரை தாங்கள் சரியாக விளையாடவில்லை என்றும், தீ விபத்து முடிந்து மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் தங்களது அணி வெற்றி பெற்றதாகவும் ஆண்ட்ரூ தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு ஆறு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும், தன்னார்வக் குழுவினரும் விரைந்து வந்து போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த வார இறுதியில் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் பீர்க்கிர்க் அருகே மூன்று நிலங்களில் பரவிய தீ உள்பட பல காட்டுத்தீ சம்பவங்களை தீயணைப்புத் துறையினர் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், “இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை; இதுதொடர்பாக தீவைப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
