Close Menu
    What's Hot

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு! மசோதாக்கள் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு பதிலளித்த உச்சநீதிமன்றம்
    Featured

    நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு! மசோதாக்கள் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு பதிலளித்த உச்சநீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments7 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    metrovaartha en 2023 11 8c1dd4d4 5ee3 41cf b370 f593381a5425 SC TNGov jpeg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “மாநில அரசின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதே நேரம் கால வரையின்றி மசோதாவை ஆளுநரும் கிடப்பில் போட முடியாது” என குடியரசுத்தலைவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு வகையில் நாட்டின் அரசியல் சூழலையே திருப்பிப்போடும் இவ்வழக்கின் தீர்ப்பு பற்றி இங்கு பார்க்கலாம்.

     

    தற்போதைய தீர்ப்பிற்கு முன்னதாக நடந்த முக்கிய நகர்வுகளை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியிருந்த தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதையடுத்து ஆளுநரின் அத்தகைய செயல்பாட்டை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

     

    அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 08, 2025 அன்று வழங்கிய தீர்ப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம். ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும். இந்நிலையில், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். இதையடுத்து அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட்டது. மேலும், மசோதாக்கள் நிறைவேற்றுவதில் காலக்கெடு விதித்தது உச்சநீதிமன்றம். அதன்படி,

     

    1. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும்போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும்போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்.

     

    2. மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்.

     

    3. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு, மாநில சட்டமன்றம் மீண்டும் அம்மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்பட்சத்தில் இம்முறை ஆளுநர் ஒருமாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

     

     

    அத்தீர்ப்பு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அதனை பெரும் சாதனையாகவே மார்தட்டி சொன்னது. அத்தீர்ப்பை கண்டித்து உச்சநீதிமன்றத்தை கடுமையாக சாட்டியிருந்தார் அப்போதைய குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்.

     

    அதையடுத்து, மசோதாக்கள் விவகாரத்தில் காலக்கெடு விதித்தது தொடர்பாக மே 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, மத்திய அரசு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

     

    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் அவசியமானது எனவும், ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் விரும்பும் வரை மசோதாக்களை கையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்க, மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தின் இந்த காலக்கெடு நிர்ணயம் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முறையிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரணையை முடித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

     

    அதையடுத்து இவ்விவகாரம் தொடர்பான தீர்ப்பை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. அத்தீர்ப்பில் குடியரசுத்தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். குடியரசுத்தலைவரின் கேள்விகளையும் உச்சின்கீதிமன்றத்தின் பதில்களையும் பார்க்கலாம்.

     

    கேள்வி 1: ஒரு சட்ட மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?

     

    பதில்: மசோதா தன்னிடம் வந்தவுடன் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. அவை, 1.ஒப்புதல் தரலாம். 2.நிறுத்தி வைக்கலாம். 3.குடியரசு தலாவருக்கு அனுப்பி வைக்கலாம். நிறுத்தி வைக்கும்போது, அதை அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சட்டசபைக்கு திருப்பி அனுப்புதல் என்ற வகையில் நான்காவது வாய்ப்பு கிடையாது. எனவே, நிறுத்தி வைத்தல் என்ற முடிவை எடுத்தால், அதை அவசியம் சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமலேயே ஆளுநர் மசோதாவை தன்னிடம் வைத்திருப்பது, கூட்டாட்சி தத்துவங்களுக்கு எதிரானது. “சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமல் ஆளுநர் தன்னிடமே மசோதாவை வைத்திருக்கலாம்” என்ற மத்திய அரசின் முடிவை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

     

     

    கேள்வி 2: மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?

     

    பதில்: சாதாரணமாக அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்படுவார். ஆனால், அரசியல் சட்டத்தின் 200-ம் பிரிவின்படி ஆளுநருக்கு தனியுரிமை உள்ளது. அதன்படி அவர், மசோதாவை திருப்பி அனுப்பலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்.

     

     

    கேள்வி 3: அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவின்படி, ஆளுநருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?

     

    பதில்: அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி ஆளுநருக்கான தனியுரிமைகள் ஏற்கத்தக்கவையே. ஆளுநர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நீதிமன்றம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது. ஆனால், நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காமல், காரணமின்றி முடிவு எடுக்காமல் இருந்தால் தன் கடமையை செய்யும்படி ஒரு வரையறுக்கப்பட்ட உத்தரவை (Limited Mandamus) ஆளுநருக்கு நீதிமன்றம் பிறப்பிக்க முடியும்.

     

     

    கேள்வி 4: அரசியல் சட்டத்தின் 361-வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவின் படி ஆளுநரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளதா?

     

    பதில்: அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு என்பது நீதித்துறை மறுஆய்வுக்கு முழுமையான தடையாகும். எனினும், அரசியல் சட்டப்பிரிவு 200ன்படி ஆளுநர் நீண்டகாலமாக முடிவு எடுக்காத வழக்குகளில் இந்த நீதிமன்றம் பயன்படுத்த அதிகாரம் அளிக்கும் நீதித்துறை மறு ஆய்வின் வரையறுக்கப்பட்ட வரம்பை மறுக்க இந்த தடையை பயன்படுத்த முடியாது. ஆளுநர் தனிப்பட்ட விலக்குரிமையைப் பெற்றிருந்தாலும் ஆளுநரின் அலுவலகம் இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும்.

     

     

    கேள்வி 5: அரசியல் சட்டத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

     

    கேள்வி 6: அரசியல் சட்டத்தின் 201-வது பிரிவின் படி, குடியரசுத்தலைவரின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா?

     

     

    கேள்வி 7: அரசியல் சட்டத்தில் குடியரசுத்தலைவரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

     

     

    மேலே கூறப்பட்ட கேள்விகள் 5, 6 மற்றும் 7-க்கான ஒரே பதில்: அரசியல் சட்டத்தின் 200 மற்றும் 201-ம் பிரிவுகள், அரசியலமைப்பை நிர்வகிப்போர், தங்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்தியா போன்ற ஒரு கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நாட்டில் சட்டம் இயற்றும் செயல்பாட்டில் எழக்கூடிய தேவை பல்வேறு சூழ்நிலைகளை மனதில் கொண்டு இந்நெகிழ்வுத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

     

    ஆகவே, ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு முடிவெடுக்க காலக்கெடு விதிப்பது என்பது அரசியலமைப்பு மிகவும் கவனமாகப் பாதுகாக்கும் இந்த நெகிழ்ச்சித்தன்மைக்கு முற்றிலும் முரணாக இருக்கும். அரசியல் சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு இல்லாத நிலையில் பிரிவு 200-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை இந்த நீதிமன்றம் பரிந்துரைப்பது பொருத்தமானதாக இருக்காது.

     

    ஆளுநருக்கு சொல்லப்பட்டதை போன்ற காரணமே பிரிவு 201-ன் கீழ் குடியரசுத்தலைவருக்கும் பொருந்தும். எனவே, அரசியல் சட்டப்பிரிவு 201-ன் கீழ், அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறை ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கொண்டு குடியரசுத்தலைவரை கட்டுப்படுத்த முடியாது.

     

     

    கேள்வி 8: ஒரு ஆளுநர் தனக்கு வந்த மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது, குடியரசுத்தலைவரின் அதிகாரம் தொடர்பான அரசியல் சட்ட விதிமுறைகள் குறித்து குடியரசுத்தலைவர் 143-வது சட்ட பிரிவின் படி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்க வேண்டுமா?

     

    பதில்: ஆளுநரால் ஒரு மசோதா அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு முறையும், குடியரசுத்தலைவர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியமில்லை. குடியரசுத்தலைவரின் மனதுக்கு திருப்திகரமாக இருந்தால் போதுமானது. தெளிவு இல்லாமை அல்லது ஆலோசனை தேவை என்றால் குடியரசுத்தலைவர் அதை கேட்டுப்பெறலாம்.

     

     

    கேள்வி 9: அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி ஆளுநரும், 201வது பிரிவின் படி குடியரசுத்தலைவரும் எடுக்கும் முடிவுகள் சட்டம் ஆவதற்கு முன்னரே சட்டத்தன்மை (நீதி விசாரணைக்கு உட்பட்டவையா) வாய்ந்தவையா? அந்த சட்டம் அமல் செய்வதற்கு முன்னதாகவே, நீதிமன்றங்கள் அவற்றின் பொருள் தொடர்பான விசாரணைகளை நடத்தலாமா?

     

    பதில்: இல்லை. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 200 மற்றும் பிரிவு 201ன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரின் முடிவுகள், சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை அல்ல; மசோதாக்கள் சட்டமாக மாறினால் மட்டுமே அவற்றை எதிர்க்க முடியும்.

     

     

    கேள்வி 10: ஆளுநர் அல்லது குடியரசுத்தலைவரின் உத்தரவுகளை, அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின்படி வேறு வகையில் பிறப்பிக்க முடியுமா?

     

    பதில்: இல்லை. அரசியல் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத்தலைவர் / ஆளுநர் உத்தரவுகளையும் இந்த நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது. அரசியல் சட்டம், குறிப்பாக பிரிவு 142, மசோதாக்களின் Deemed Assent (கருதப்பட்ட ஒப்புதல்) என்ற கருத்தை அனுமதிக்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்

     

     

    கேள்வி 11: மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவின்படி, ஆளுநர் ஒப்புதல் தராமலேயே அமலுக்கு கொண்டு வர முடியுமா?

     

    பதில்: கேள்வி 10க்கு அளிக்கப்பட்ட பதில் அடிப்படையிலான விளக்கம். அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் சட்டமன்ற செயல்பாடுகளை மற்றொரு அரசியலமைப்பு அதிகாரத்தை கொண்டு மாற்ற முடியாது

     

     

    கேள்வி 12: உச்சநீதிமன்றத்தின் ஒரு அமர்வு தனக்கு முன் வந்துள்ள ஒரு வழக்கில் அரசியல் சட்டத்தின் 145 (3)-ன் படி, அரசியல் சட்டம் தொடர்பான பல விதமான கேள்விகள் எழும்போது குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?

     

    பதில்: இந்தக் கேள்வி பொருத்தமானதல்ல என்பதால் பதிலளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

     

     

    கேள்வி 13: அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின் படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டவையா அல்லது அமலில் இருக்கும் அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?

     

    பதில்: கேள்வி 10-ன் ஒரு பகுதியாக பதிலளிக்கப்பட்டது.

     

     

    கேள்வி 14: மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான விவகாரத்தில் அரசியல் சட்டத்தின் 131-வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகார வரம்பை ஏதாவது வகையில் அரசியல் சட்டம் தடுக்கிறதா?

     

    பதில்: பொருத்தமற்றது என்பதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை.

     

     

    இவ்வாறு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றத்தால் இன்றைய தீர்ப்பின் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதில்கள் தமிழ்நாடு அரசுக்கு சற்று பின்னடைவாகவும், திமுக அரசுக்கான குட்டாகவும் ஒருபுறம் பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு இல்லை, “இது தீர்ப்பல்ல; கருத்து தான். இக்கருத்து அன்றைய தீர்ப்பை பாதிக்காது” என திமுகவின் வில்சன் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறாக நீதின்றம் இன்று கூறியுள்ளவற்றின் மீதான விவாதங்கள் தொடங்கி தொடர்கின்றன.

     

    இதில் மற்றுமொரு கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களின் பதவிக் காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் அவரது அமர்வின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபண மோசடி வழக்கு: ராபர்ட் வத்ரா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ED!
    Next Article ஜனநாயகயன் படத்தின் தெலுங்கு விநியோக உரிமை இவ்வளவுதானா !!! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    December 24, 2025

    இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!

    December 24, 2025

    திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.