முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலர் செந்தில் குமார் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். அவர் தமிழக அமைச்சரவை பட்டியலுடன்ஆளுநரை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு, புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்பட 9 பேர் அமைச்சர்களாக முதற்கட்டமாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார், இன்று மக்கள் மாளிகைக்கு வந்து, ஆளுநர் ஆர்லேகரை சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புகளை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்கனவே பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும்,
புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் யார், அவர்களுக்கான இலாகாக்கள்,
கூட்டணிக் கட்சியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதா, அவர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள என்பன போன்ற விவரங்கள் இன்றே வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
புதிய அரசு பதவியேற்று ஒரு வாரம் ஆகும் நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டால்தான் நிலுவையில் உள்ள பல்வேறு துறை சார்ந்த பணிகள் தொடங்கும் என அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
