தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணை (G.O. Ms. No. 43) மூலம், ‘தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003’-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக, இதுவரை டாஸ்மாக் கடைகளுக்குள் அல்லது கடையை ஒட்டியே மட்டுமே பார்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைக்கு அருகிலோ அல்லது அந்தக் கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள்ளோ பார்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பார்களின் குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், 15 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பார்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதுடன், பார்கள் செயல்பாட்டில் நிர்வாக தாமதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டாஸ்மாக் பார்களின் செயல்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
