திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கார் பழுது பார்க்கும் நிலையத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ஆய்வு மேற்கொண்டார். கார் பழுதுபார்க்கும் நிலையங்களில் மேற்கொண்ட வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்தார், மேலும் திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதன்,

MSME துறையின் கீழ் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. மாவட்ட தொழில் மையம் (DIC) மூலமாக தொழில் முனைவோருக்கு அளிக்கப்படும். கடன் உதவிகள், மானியங்கள் மற்றும் ‘நீட்ஸ்’ (NEEDS) போன்ற அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அடிப்படை கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திருப்பூரில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மின்சார நிலைக்கட்டணப் பிரச்சனைகள் குறித்து இங்குள்ள துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் விரிவாகக் கலந்துபேசி, விரைவில் உரிய தீர்வு காண்பதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் நூல் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் சர்வதேசச் சந்தை மாற்றங்களால் ஏற்படுபவை. இருப்பினும், முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையின்படி, 2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறிய அமைச்சர் மதன்,

இதில் MSME துறையின் பங்களிப்பு 30% ஆக இருப்பதால், தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து மானியங்கள் மற்றும் கடன் திட்டங்கள் தடையின்றிச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சிட்கோ தொழிற்பேட்டைகளில் பயன்பாடின்றி உள்ள கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் (Marketing) உதவிகள் வழங்கப்படும். தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கஸ்டமைஸ்டு (Customized) சிறப்புத் திட்டங்கள் வரவிருக்கும் நாட்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மதன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version