தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் சுமார் 2 மணி நேரமாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த இரண்டு நாள்கள் கையெழுத்திட ஆஜராகாத நிலையில், இன்று வந்த செந்தில்பாலாஜி சிறிது நேரம் வெளியே காத்திருந்து பின்னர் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றார்.
விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி,
தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கில் புகாரிலும் என் பெயர் இல்லை, எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை. ஆனாலும், என் பெயர் கூறப்பட்ட நிலையில், முன் ஜாமீன் பெற்று காலை மாலையில் கையெழுத்திட்டு வருகிறேன்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதலாக ஒரு வழக்கை பதிவு செய்து, என் அறையில் சோதனையும், பல்வேறு இடங்களில் சோதனையும் செய்தார்கள், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தேன்.
முன் ஜாமீன் தொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதால் இந்த வழக்கில் குறிப்பிட்ட நாட்கள் கையெழுத்திடுவதில் 5 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும் என அனுமதி கேட்டு காவல்துறை மற்றும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நேற்றே முன் ஜாமீன் வழங்கியதால், இன்று முறைப்படி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைத்தேன்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை, எப்.ஐ.ஆரில் பெயர் உள்ள நபர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
ஏற்கனவே அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதிலிருந்து லஞ்சஒழிப்பு துறை புதிய வழக்கு போட்டுள்ளது, இந்த வழக்கு நீண்டு செல்லாது.
ஒரு ஆக்கப்பூர்வமான அரசு என்றால் மக்களுடைய அடிப்படை தேவைகள், கோரிக்கைகளை, குறைகளை நிறைவேற்றக்கூடிய அந்த பணிகளை கவனம் செலுத்தாமல், வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு முனைப்பு காட்டுகிறது.
நீங்களே பார்ப்பீர்கள், நான் மட்டுமல்ல, பல பேர் மீது வழக்குகள் வந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கு சென்று பொய்யான வழக்குகள் என்பதை நிரூபித்து காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.
