அனைத்து ரக நூலுக்கும் கிலோவுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசை போல மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூரின் முக்கிய தொழிலான பனியன் உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 60% பனியன் ஆடைகள் திருப்பூரில் இருந்து மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நூல் உற்பத்தி செய்ய தேவையான பருத்தி விளைச்சல் குறைந்தது காரணமாக பஞ்சு விலை திடீரென அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனால் நூல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர்ந்து பஞ்சு விலை உயர்ந்து வருவதால் நூல் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கேண்டிட் பஞ்சு விலை தற்பொழுது 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து பஞ்சு விலை உயர்ந்ததால் கடந்த மாதம் 12 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதம் முதல் தேதியில் அனைத்து ரக நூலுக்கும் கிலோவுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது.
இதனால் ஏற்றுமதி மற்றும் பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலையை சீராக வைத்துக் கொள்ள மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு வைத்துள்ள காட்டன் கார்ப்பரேஷன் போல தமிழ்நாடு அரசும் தனியாக பருத்தியை கொள்முதல் செய்து தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் சீரான விலைக்கு கொடுத்து நூல் விலை உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
