அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 3-வது இடத்திற்குத் தள்ளும் செயலுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக சில அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில், தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஆகிய பாடல்களுக்குப் பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்தில் பாடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கடந்த 28ம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் இத்தகைய நிகழ்வு நடைபெற்று தமிழக அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது.

இந்தநிலையில், இந்த பிரச்சனை குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்களின் உணர்வோடும், பண்பாட்டோடும் கலந்தது என்றும் அதை 3-வது இடத்திற்குத் தள்ளுவது என்பது, தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் அடையாளத்தின் மீதும் தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதல் என்றும் விமர்சித்தார்.

தேசிய கீதத்திற்கு இணையான மரியாதையை மாநிலப் பாடலுக்கும் அளிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், அதனைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றார். மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருவதாகவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version