தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40- 50 கி.மீ வேகத்தில்) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இதர மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 31) கனமழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வடகடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் அதன் பிறகு, வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version