வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், காக்கா தோப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச யோக தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகா விழிப்புணர்வு குறித்து கூறியதோடு, பிரதமர் நரேந்திர மோடி யோகா நிகழ்வில் பங்கேற்பது போல, வரும் காலங்களில் தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
யோகா என்பது குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு மிகவும் தேவை. யோகா மற்றும் தியானம் அனைவரும் பழக வேண்டும். யோகா என்பது உடல் நலம் நலமாக இருக்க செய்யக்கூடியது எனக் கூறிய அவர், தனது யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை நினைவுக்கூர்ந்தவர், தவெக அரசின் ஒரு மாத காலம் தொடர்பான கேள்விக்கும், அரசு பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் அரசு நிதித்துறை குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஆரோக்கியமாக சென்று இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் முழுமையான உரை வாசித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று ஆளுநரே சொல்லி இருக்கிறார் எனக் கூறினார்.
தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா என கேள்வி எழுப்பிய தமிழிசை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைச்சர்கள் கர்நாடகாவில் மேகதாது அணையை தடுக்க முடியவில்லை என்றால் இவர்களுடைய நிலை என்ன? காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம்தான் போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்
