தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டீ, வடை கொடுத்து  9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள என்.வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிறைபாண்டி. இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது 27 வயது மகன் ராஜேஷும் தந்தைக்கு உதவியாக அவ்வப்போது டீக்கடைக்கு வந்து சென்றுள்ளார். அப்படி வரும்போஒது, அதே பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு இலவசமாக டீயையும் வடையையும் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக, அந்த மாணவனிடம் தனது பாலியல் சீண்டலை அரங்கேற்றியுள்ளார்.

இப்படி ராஜேஷ், மாணவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், இதனை அறிந்த அப்பகுதி சிறுவர்கள், மாணவனை கேலியும் கிண்டலும் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 14 வயது மாணவன், தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த, ராஜேஷ் குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையிலும் சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தது உறுதியானதைத் தொடர்ந்து, ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெற்றோர் தங்களின் பெண் பிள்ளைகளை மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் போல!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version