மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த திட்டத்திற்கு ஜப்பான் ஜைக்கா (JICA) நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது. 2024 மே மாதம் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 2027 பிப்ரவரிக்குள் முழுமையாக நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளர் (OPD) கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் 900 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இதில் 150 படுக்கைகள் தொற்றுநோய் சிகிச்சைக்காக ஒதுக்கப்படுகின்றன.
மொத்தம் 24 கட்டிடங்கள், 750 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், விளையாட்டுத் திடல், மாணவர் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளுடன் உலகத் தரத்திலான மருத்துவ வளாகமாக எய்ம்ஸ் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நான்காம் ஆண்டு மாணவர்கள் தோப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட விடுதியில் தங்கியிருந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் திறப்பு
மாணவர்களின் தற்போதைய விடுமுறை முடிந்தவுடன் புதிய வளாகத்தில் நேரடியாக வகுப்புகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மற்றும் விடுதி கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் புதிய வளாகத்தில் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் மாதத்திலேயே மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
