தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையகங்களில் “ஆய்வு” என்ற பெயரில் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் சிவகாசி பட்டாசுத் தொழில் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வர்த்தகம் நடைபெறும் இந்தத் தொழில், நாட்டின் மொத்த பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை பூர்த்தி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அனைத்து உரிமங்களையும் பெற்று சட்டப்படி இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையகங்களில் அதிகாரிகள் நடத்தும் அதிரடி ஆய்வுகள் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தீபாவளி சீசன் தொடங்கும் நேரத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால், கிராமப்புற பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினக்கூலியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது சிவகாசி மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அச்சமின்றி தொழிலை தொடரும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில் நிறுவனங்கள் மீது அச்சுறுத்தல் தொடருமானால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுமதி பெற்று சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் நலனை பாதுகாக்க மாபெரும் ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் என்றும் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version