போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், மாபெரும் போராட்டம் நடத்த லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி வருவார்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டம் வெறும் ‘டிரெய்லர்’ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய இயக்கம் என்று வர்ணித்த ரங்கா, கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் டெல்லிக்கு வருவார்கள் என்றும், இந்த முறை பின்வாங்கி அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

போராட்டக்காரர்கள் அமைதியற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், ஜூலை 20 பேரணி முற்றிலும் அமைதியான முறையில்தான் நடைபெற்றது என்றும், காவல்துறை மிருகத்தனமாக நடந்து கொண்டு மாணவர்களைத் தாக்கிய பின்னரே அங்கு மோதல் போக்கு உருவானது என்றும் குற்றம் சாட்டினார். காந்தி மற்றும் அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுவதால்தான் இளைஞர்கள் இவ்வளவு நாட்களாக அமைதியாகப் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் மீது எந்த விதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படுவதையோ அல்லது எதிர்காலத்தில் பதிவு செய்யப்படுவதையோ அனுமதிக்க மாட்டோம் என்றும், அத்தகைய உறுதிமொழி அளிக்கப்படாமல் போராட்டம் முடிவுக்கு வராது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

UAPA மற்றும் NSA போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்படவும், சிறைவாசம் செல்லவும் தாங்கள் தயங்கவில்லை என்றும், இந்த இயக்கத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அஷுதோஷ் ரங்கா அழைப்பு விடுத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version