40 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா–லெபனான் இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் (Joseph Aoun) உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், “அமெரிக்கர்கள் இந்த அழகான நாட்டிற்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில், அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களும் லெபனானுக்கு நேரடி விமானங்களை இயக்க என் நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்தசந்திப்பின்போது டிரம்ப், “லெபனான் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. அதற்கு உரிய மரியாதையும் ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த நாட்டிற்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவும்” என்று உறுதியளித்தார். எனினும், உதவி தொடர்பான குறிப்பிட்ட திட்டங்கள் குறித்து அவர் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
லெபனானின் தெற்குப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், அப்பகுதியில் லெபனான் ராணுவம் முழுமையான கட்டுப்பாட்டை நிறுவ சர்வதேச ஆதரவு தேவை என்றும் ஜோசப் அவுன் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “இஸ்ரேல் படைகள் வெளியேறும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது” என்று கூறினார். ஆனால், அதற்கான காலக்கெடு அல்லது கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
1985-ஆம் ஆண்டு TWA விமான கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்ட இந்த சேவை, மீண்டும் அனுமதிக்கப்படுவது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. 1985-ஆம் ஆண்டு TWA Flight 847 விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் நிர்வாகம் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவையை நிறுத்தியது. தற்போது, நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அனுமதி வழங்கியிருந்தாலும், ஈரான்–இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு பதற்றம் மற்றும் லெபனானில் இன்னும் நீடிக்கும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக, அமெரிக்க விமான நிறுவனங்கள் உடனடியாக நேரடி சேவையைத் தொடங்குமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
