கரூர் துயரச் சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது யார் மற்றும் தப்பித்துச் சென்றது யார் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
ஒரு மனிதன் எவ்வளவு உயரத்தைத் தொட்டாலும், மனதில் சில காயங்கள் என்றும் ஆறாது. கரூர் சம்பவம் எனக்கு அப்படியொரு தீராத வலியைத் தந்துள்ளது. அன்று கரூருக்கு வரும்போது, எதிர்பார்த்ததை விட பெரும் கூட்டம் கூடியிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கலாம். அவர்கள் எங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே நிகழ்வை ரத்து செய்திருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினார்.
“நெடுஞ்சாலையில் போலீசார் அரங்கேற்றிய நாடகத்தை நம்பிவிட்டேன். திரையில் எனது படத்தையும் பாடலையும் பார்த்து முத்தமிட்ட எனது சகோதரி, சகோதரர்களின் பிள்ளைகளை இழந்துவிட்டோம். இந்த வலியுடன் வீட்டில் இருந்த என்னை ‘ஓடிவிட்டான்’ என்று சிலர் கூறுகிறார்களா? வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் வலியில் இருக்கும் என்னை ஏளனம் செய்து பழி சுமத்துவது நியாயமா?” என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு… என்று பதிவிட்டுள்ளார்.
