வாட்ஸ்அப்பின் புதிய ‘Username’ அம்சம் தொடர்பாக மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க மெட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (ஜூலை 9) முடிவடைந்துள்ளது.

வாட்ஸ்அப்பில் செல்போன் எண் பகிரப்படாமல், தனித்துவமான ‘Username’ மூலம் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் இணையவழி மோசடிகள், ஃபிஷிங் (Phishing), ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டக் குற்றங்களை அதிகப்படுத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு, இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் (IT Act) ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அரசு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனம் கூடுதல் அவகாசம் கோரியதையடுத்து, அரசு ஜூலை 9 வரை காலக்கெடுவை நீட்டித்திருந்தது.  அரசுடன் விரிவான ஆலோசனைகள் முடியும் வரை, இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று மெட்டா நிறுவனம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. ஆனால் தற்போதுவரை இதுகுறித்து மெட்டா நிறுவனம் பதிலளிக்கவில்லை.

அரசுடனான ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விளக்கங்கள் குறித்த ஆவணங்களை மெட்டா நிறுவனம் முறையாகச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வாட்ஸ்அப் மட்டுமல்லாது டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பிற செயலிகளிடமும் அவற்றின் யுசர்நேம் வசதிகள் குறித்து அரசு விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version