தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும் முறைகேடுகள் களையப்பட்டு வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய அமைச்சர், தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் மின்தடைகளைச் சரிசெய்ய அதிகாரிகளுக்குத் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.

முந்தைய ஆட்சியின் போது மின்சாரத் துறையில் நடைபெற்ற டெண்டர் மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அவற்றைக் களைய தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றிகள் 13 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 2.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் இந்த நிதிச் சுமையைச் சீரமைப்பதே தவெக அரசின் முன்னுரிமை என்றார்.

மின்சார வாரியத்தின் மொத்த பணியாளர் பலம் 1.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 70,000 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும், காலியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று தெளிவுபடுத்திய அமைச்சர் நிர்மல் குமார், பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மின்சாரத் துறையைத் தூய்மைப்படுத்துவதே தனது முதல் நோக்கம் என்று கூறிய அவர், ஊழலுக்கு எவ்வித இடமும் இருக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version