காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது மேகதாது அணை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய அவர், காவிரி நீரே டெல்டா மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முதன்மையான ஆதாரம் என வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருடன் ஆகஸ்ட் 3 அன்று சந்திப்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நாள் உகந்ததல்ல என கர்நாடகத் தரப்பு தெரிவித்ததால் அது நடைபெறவில்லை. ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு தனது உரிமையை வலுவாக முன்வைத்தது.
இதையடுத்து, ஜூலை 29 முதல் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. எனினும் கர்நாடகா விகிதாசார அடிப்படையில் நீரை விட்டபோதும் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டதாக தமிழ்நாடு சுட்டிக்காட்டியது. ஜூலை 30 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டத்தில் குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டாலும், கர்நாடகா அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. 3,500 கன அடிக்குப் பதிலாக வெறும் 144 முதல் 619 கன அடி வரை மட்டுமே நீர் வந்ததால் பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.
இதனால் ஆகஸ்ட் 12க்குள் நீர் வர வேண்டும், ஜூன் 1 முதல் ஜூலை 28 வரையிலான நிலுவை நீரையும் உடனடியாகத் திறக்க வேண்டும், பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும் என ஆணையத்தை தமிழ்நாடு வலியுறுத்தியது.முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 6 நிலவரப்படி தமிழ்நாடு பெற்ற நீர் வெறும் 4.947 டி.எம்.சி மட்டுமே. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் நீர் வரத்து அதிகரித்துள்ளபோதும் இந்நிலை தொடர்கிறது. காவிரி விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த், நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சூழலைக் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் எனவும் கூறினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.
