சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்ட்-டை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னையில் 2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 2 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கை ஆறு மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர பாண்டியன் முன் பொன்முடி நேரில் ஆஜராகி, தனக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுந்தரபாண்டியன், பொன்முடிக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை திரும்பப் பெற்று, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
